கொரோணாவால் மரணம் அடைந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்தல் விடயத்தில் இலங்கை சரி என்றால் முழு உலகும் பிழையா?

Spread the love

லத்தீப் பாரூக்

இம்மாத முற்பகுதியில் பிரபல ஊடகவியலாளர் ஒருவருடன் நடந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சிரேஷ்ட கிருமியியல் நிபுணரும் தொற்றுநோயியல் நிபுணருமான டொக்டர் நிஹால் அபேசிங்க கொரோணா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைபவர்களை புதைக்கலாம் அல்லது எரிக்கலாம் என தெளிவாக விளக்கி இருந்தார். அவ்வாறு அடக்கம் செய்யப்படுபவர்களின் புதைகுழிகளில் இருந்து தண்ணீருக்கு அடியால் கிருமிகள் பரவும் அதனால் உயிர்வாழ்பவர்களுக்கு சகாதார ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் தெளிவாக விளக்கி இருந்தார்.

இது சம்பந்தமாக உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் இலங்கை மட்டும் இந்த விடயத்தில் கொரோணாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் அவர்களின் சமய உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காமல் தொடர்ந்தும் மரணம் அடையும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் பிடிவாதமாக இருந்து வருகின்றது.
சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவின் ஆலோசனையின் பேரில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் முழுக்க முழுக்க வைரஸ் பரவலோடு சம்பந்தப்பட்ட இந்த தொழில்நுட்பக் குழுவில் வைரஸ் சம்பந்தப்பட்ட ஒரு நிபுணர் கூட இல்லை என்பது கவலைக்குரியதாகும். இந்தக் குழுவில் ஒரு வைரஸ் நிபுணர் கூட இல்லை என்ற விடயத்தை பேராசிரியர் திஸ்ஸ விதாரண உறுதி செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இலங்கையில் உள்ள சிரேஷ்ட கிருமியியல் மற்றும் நுண்கிருமியியல் நிபுணர் என்பதும் இங்கே நினைவூட்டத்தக்கது.
அவர் ஆங்கில தினசரி ஒன்றுக்கு அண்மையில் அளித்திருந்த பேட்டியில் இந்த தொழில்நுட்ப குழுவில் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எவரும் இல்லை என்றும் இது பற்றி தன்னோடு எந்தவிதமான ஆலோசனைகளும் நடத்தப்படவில்லை என்பதையும் அவர் உறுதி செய்தார். இந்நிலையில் துறைசார் நிபுணர்கள் எவரும் இல்லாத ஒரு தொழில்நுட்பக் குழு என்று சொல்லப்படும் ஒரு குழு எப்படி ஒரு உணர்வுபூர்வமான விடயத்தில் மற்றவர்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காமல் அரசுக்கு ஆலோசனை வழங்க முடியும் என்பதே முக்கியமான கேள்வி. முஸ்லிம்களுக்கு முற்றிலும் விரோதமான போக்கினைக் கொண்டுள்ள இந்தியாவில் கூட முஸ்லிம்களின் உடல்களை அடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இறந்தவர்களை அடக்கம் செய்வது அவர்களின் சமயக் கடமைகளில் ஒன்றாகும். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது பற்றியும் அவர்களுக்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிமைப் பொருத்தமட்டில் மரணம் என்பது இந்த உலகில் இருந்து விடுபட்டு செல்வதும் அடுத்த உலகுக்கான வாழ்க்கையை ஆரம்பிப்பதும் ஆகும்.

இலங்கையில் இதுவரை கொரோணாவால் மரணம் அடைந்த முஸ்லிம்களின் உடல்கள் அவர்களின் சமய உரிமைகளுக்கு அப்பால், அவர்களது உறவினர்களின் உணர்வுகளை மதிக்காமல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளன. உண்மையிலேயே அவர்களுக்கு கொரோணா இருந்ததா என்பதை மீள் உறுதி செய்து கொள்ளும் வகையில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றின் மூலம் பிசிஆர் சோதனை செய்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. காரணம் இந்தக் காலப்பகுதியில் இயற்கை மரணம் எய்திய பலருக்கு கொரோணா தொற்று இருப்பதாகக கூறப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் பரவலாக எழுப்ப்பட்டுள்ளன.

மரணம் அடையும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக இலங்கை முழுவதிலும் அதற்கப்பால் நமது கடல் எல்லைகளைத் தாண்டி உலக நாடுகள் பலவற்றிலும் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பி உள்ளன. இலங்கையில் இதற்காக கூறப்படும் காரணம் எந்த வகையிலும் மருத்துவம் சார்ந்ததோ அல்லது சுகாதாரம் சார்ந்ததோ அல்ல என்ற கருத்தே பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களை நெருக்குதலுக்கு உள்ளாக்கும் ஒரு செயற்பாடே அன்றி வேறு எதுவும் இல்லை என்பதே பரவலான அபிப்பிராயமாகும். 2009 மே மாதம் யுத்தம் முடிவுற்ற பின் இடம்பெற்ற சில சம்பவங்களைப் போல் ஒருவேளை இது முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்து அவர்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டி பின்னர் அவர்கள் மீது இனரீதியான தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான முன்முயற்சியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

பாராளுமன்றத்துக்குள் இது சம்பந்தமாக முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதியும் அரசாங்கமும் இது சம்பந்தமான தமது கருத்துக்களை யும் கொள்கையையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா உற்பட ஒரு குழுவினர் இந்த விடயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினர். ஆனால் உச்ச நீதிமன்றமோ இந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது. தனது முடிவுக்கான எந்த விளக்கத்தையும் அளிக்காமல் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு முஸ்லிம்கள் தமக்கு நியாயம் கிடைக்கும் என நம்பியிருந்த எல்லா வழிகளும் தடுக்கப்பட்டதால் பரவலான கோபமும் விரக்தியும் மட்டுமே தற்போது முஸ்லிம்களிடம் எஞ்சி உள்ளது.
இதனிடையே 20 நாள் குழந்தை ஒன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமை இலங்கையில் மட்டும் அன்றி முழு உலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழந்தை டிசம்பர் மாதம் 7ம் திகதி காலை 10.45 அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 8ம் திகதி மாலை 4.15க்கு அது மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்தநாள் டிசம்பர் 9ம் திகதி மாலை 4 மணிக்கு அந்தக் குழந்தை தகனம் செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் மரணம் பற்றி பெற்றோருக்கு அறிவிக்கப்படவில்லை. பெற்றோர் நேரம் கழித்து ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்ட போதுதான் குழந்தை மரணம் அடைந்து விட்டதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிசிஆர் சோதனை நடத்தப்பட வேண்டும் என குழந்தையின் தந்தை மன்றாடி உள்ளார். ஆஸ்பத்திரி நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளதோடு குழந்தையை தகனம் செய்ய கையொப்பம் இடுமாறு அவரை வற்புறுத்தி உள்ளது. அவரின் சம்மதம் இன்றியே குழந்தையை பொசுக்கிவிடும் முடிவை எடுத்த ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்தக் காட்சியைப் பார்வையிட பொரள்ளை கனத்தை பொது மயானத்துக்கு வருமாறு தந்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. தகனம் செய்வதற்காக இன்னும் எத்தனையோ உடல்கள் இருக்கும் நிலையில் ஏன் எனது குழந்தையை மட்டும் தகனம் செய்ய இவ்வளவு அவசரம் காட்டுகின்றீர்கள் என தந்தை எழுப்பிய கேள்விக்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இருந்தும் டாக்டர்களிடம் இருந்தும் கடைசி வரை பதில் இல்லை.
“என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற அக்கறை அவர்களிடம் கொஞ்சம் கூடத் தென்படவில்லை. மனித உணர்வுகள் எதுவுமே அற்ற நிலையில் காணப்பட்ட அவர்கள் குழந்தையை எரிப்பதிலேயே குறியாக இருந்தனர். அதற்கு மேல் என்னால் எதுவும் பேச வார்த்தைகள் வரவில்லை” என்று அந்த அப்பாவித் தந்தை ஒரு பேட்டியில் தெரிவித்தள்ளார்.
இதே விதமாக சமூக ஊடகங்களில் வலம் வரும் இன்னொரு விடியோ காட்சியில் தெஹிவளை களுபோவில ஆஸ்பத்திரியில் தனது மனைவிக்கு நேர்ந்த கதியை ஒரு முஸ்லிம் சகோதரர் விளக்கி உள்ளார். 2020 டிசம்பர் 16ல் அந்தப் பெண் களுபோவில ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்துள்ளார். அந்த பெண்ணின் ஜனாஸாவை பார்க்க கணவருக்கும் பிள்ளைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அங்கும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிசிஆர் சோதனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடலை எரிக்க சம்மதித்து கையொப்பமிடுமாறே அவர்களும் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
20 நாள் குழந்தையின் உடல் எரிக்கப்பட்ட விவகாரம் முழு உலகிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நாடுகளும் அவற்றின் மக்களும் தான் இலங்கை நெருக்கடி மிக்க சூழலில் தத்தளித்தபோது நேசக் கரம் நீட்டியவர்கள். இந்தக் குழந்தையின் புகைப்படம் வளைகுடா நாடுகளில் வாகனங்களில் ஒட்டப்பட்டும் பொது இடங்களில் ஒட்டப்பட்டும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னாள் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கொரோணா பாதிப்பில் உயிர் இழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமைக்கு இங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நைஜீரியாவில் உள்ள ஒரு மார்க்க அறிஞர் அங்குள்ள பிரதான பள்ளிவாசலில் இதுபற்றி உரையாற்றும் அளவுக்கு எமது நாட்டுக்கு எதிரான பிரசாரங்கள் வெளிநாடுகளில் தலைதூக்கி உள்ளன. இத்தகைய பிரசாரங்கள் உலகம் இலங்கையின் ஒரு பகுதியில் உள்ளதா அல்லது இலங்கை உலகின் ஒரு பகுதியா என சிந்திக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இனவாத யுத்தம் முடிவடைந்தது முதல் அதுவரைகாலமும் ஒததுழைப்பு வழங்கி வந்த முஸ்லிம் நாடுகளைக் கைவிட்டுவிட்டு அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கினைக் கொண்டுள்ள அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகளுடன் கைகோர்த்தது. இங்குள்ள முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாடுகளின் மறைமுக நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் அமுல் செய்கின்றதா என்ற சந்தேகமே இப்போது மேலோங்கி உள்ளது. தேசபக்தர்கள் என தம்மை அழைத்துக் கொண்டு சமூகங்களையும் சமூக அமைதியையும் கூறு போடும் இனவாதிகள் இந்த நாடுகள் தமது சொந்த நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றத்தான் இங்கு முகாம் இட்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளத் தவறி உள்ளனர்.
இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புணர்வு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்பனவற்றைத் தூண்டிவிட்டு நாட்டில் உள்ள சமூகங்களைப் பிளவு படுத்துவது தான் இவர்களின் உண்மையான நோக்கம்.

இதனால் தான் சிங்கள பௌத்தவாத போக்கினை மட்டும் கொண்டுள்ள ஒரு அரசாங்கம் பல்இன, பல்சமய, பல்மொழி. பல்கலாசார சூழலைக் கொண்டுள்ள இலங்கை போன்ற ஒரு நாட்டில் செயல்பட முடியுமா என்ற அச்சத்தைப் பலரும் கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் முன்னணியின் ஆதரவுடன் நமது அண்டை நாட்டில் ஆட்சி புரியும் பிஜேபி அரசு இதற்கு ஒரு நல்ல உதாரணமாகத் திகழ்கிறது. அங்கு தற்போது பிஜேபி இந்துத்வாவுக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வருகின்றன. பிஜேபி அரசு இதுவரை இந்தியாவுக்கு அழிவை மட்டுமே கொண்டு வந்துள்ளது என்பதை அவை இப்போது உணரத் தொடங்கி உள்ளன.

நாட்டில் உள்ள மூன்று சமூகங்களிலும் மிகவும் அமைதியான சமூகமான முஸ்லிம் சமூகம் கடந்த 30 வருட யுத்தத்தின் போது சொல்லொணா துயரங்களுக்கு முகம் கொடுத்தமை பொதுவாகத் தெரிந்த விடயம் ஆகும். 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைந்தது முதல் பல்வேறு வன்முறைகளும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டதோடு ஆத்திரமூட்டும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவர்கள் இன்னும் பல துயரங்களுக்கு முகம் கொடுக்க வேண்டடியதாயிற்று.

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் வீடுகளும் எரிக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டன. வெறி பிடித்த இனவாத காடையர்கள் முஸ்லிம்களை அச்சமூட்டி அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட பூரண அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அரச அனுசரணையோடு இவை இடம்பெற்றன. அளுத்கமை, பேருவளை தர்கா நகர் போன்ற பகுதிகளில் பௌத்த மதகுருமார் தலைமையில் இந்த அநியாயங்கள் அரங்கேற்றப்பட்டன.

வன்முறைகளால் பாதிக்கப்பட்டு சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த முஸ்லிம்கள் மைத்திரி – ரணில் தலைமையிலான புதிய அணி பதவிக்கு வர தமது பூரண ஆதரவை வழங்கினர். ஆனால் அதுவும் ஒரு தவறான முடிவாகப் போய்விட்டதை முஸ்லிம் சமூகம் காலம் கடந்து தான் உணரத் தலைபட்டது. உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்தைப் பயன்படுத்தி மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளும் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளும் கட்டவிழத்து விடப்பட்டன.
இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு வருடமும் எட்டு மாதங்களும் கழிந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடாபும் இல்லை என்ற அது தொடர்பான சில உண்மைகள் இப்போது வெளிவரத் தொடங்கி உள்ளன. இது ஒரு அரசியல் சதிக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்ற உண்மை இப்போது உணரப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளின் இடையில் தான் கொவிட்-19ஆல் மரணம் அடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் வேண்டத்தகாத பிரச்சினை ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுத்துள்ள விஷேட வேண்டுகோளின் படி கொவிட்-19ஆல் மரணம் அடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்க மாலைதீவு தனது நாட்டில் இடமளிக்க முன்வந்துள்ளதாக வெளியாகி உள்ள புதிய தகவல் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்பந்தமாக மாலைதீவில் இருந்து வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ள கடிதத்தை அடுத்து இது சம்பந்தமாக ஆராயுமாறு வெளியுறவு அமைச்சு சுகாதார அமைச்சைக் கேட்டுள்ளதாகவும் மாலைதீவு அரசிடம் இருந்து உத்தியோகப்பூர்வமான அறிக்கையாக இது கருதப்படுவதால் இந்த விடயத்தில் தாங்கள் கவனம் செலுத்தவுள்ளதாகவும் பொது சுகாதார சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
1200 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இநத நாட்டின் பல்வேறு வளர்ச்சிப் பாதைகளிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர் என்பதை டொக்டர் ஹேமன்தவும் அவரது அரசாங்கமும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மரணம் அடைந்த பிறகு அவர்கள் குப்பைகள் அல்ல கண்ட இடத்தில் கொண்டு போய் கொட்டுவதற்கு. அவர்கள் தமது சொந்த மண்ணில்; கௌரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டியது அவர்களின் அடிப்படை உரிமையாகும்.

30 வருட கொடிய பிரிவினைவாத யுத்தத்தின் போது முஸ்லிம்கள் அரசாங்கத்தை உறுதியாக ஆதரித்திருக்காவிட்டால் இந்த நாடு பிளவுபட்டிருக்கும் என்பதை அவர்கள் இலகுவாக மறந்து விட்டார்கள். இலங்கை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. அது எல்லா சமூகங்களுக்கும் சொந்தமானது.
பெரும்பான்மை சமூகத்தின் இனவாத அரசியல் தான் இலங்கையின் போக்கை மாற்றி அமைத்தது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. 1948ல் நாடு சுதந்திரம் அடைந்த போது முழு உலகத்துக்கும் முன்மாதிரியான ஒரு நாடாகவே அது திகழ்ந்தது. பொருளாதாரம், அரசியல் ஸ்திரப்பாடு, சமூக நல்லிணக்கம் என எல்லாவற்றிலும் அது மேலோங்கி இருந்தது. ஆனால் இன்று உலகில் மிகவும் ஊழல் மிக்க ஒரு நாடாகவும் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்ட தோல்வி கண்ட நாடாகவும் அது மாறியுள்ளது. இந்த நிலையை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் சிறுபான்மையின மக்கள் அல்ல.
முஸ்லிம்களின் ஜனாஸா எதிர்ப்புக்கு எதிராக அமைதியான முறையில் வெள்ளைக் கொடி போராட்டம் ஒன்று இப்போது நடத்தப்பட்டு வருகின்றது. பொரளை பொது மயான பூமியின் கம்பி வேலிகளில் இந்த வெள்ளைத் துணிகள் கட்டப்படுகின்றன. அநீதி இழைக்கப்பட்டு பலவந்தமாக ஏரிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்களை நோக்கி இதுவரை தனது நேசக்கரங்களை நீட்டவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். சிங்கள தீவிரவாத சக்திகளை மகிழ்ச்சியூட்டும் போக்கையே அது தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது.

 

Post Disclaimer

Disclaimer: கொரோணாவால் மரணம் அடைந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்தல் விடயத்தில் இலங்கை சரி என்றால் முழு உலகும் பிழையா? - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *