இளைய தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய கலாநிதி உவைஸ் அஹமட்

Spread the love

நாடறிந்த கல்வியியலாளரும் சர்வதேச சிவில் சேவை அதிகாரியுமான டொக்டர் உவைஸ் அஹமத் இம்மாத முற்பகுதியில் காலமானார். இம் மாதம் ஆறாம் திகதி தெஹிவளை பள்ளிவாசல் முஸ்லிம் மையவாடியில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது கதை ஒரு வெற்றிக் கதை. பல படிப்பினைகள் மிக்க அவரது இனிமையான வாழ்க்கைப் பயணம் இன்றைய இளைய தலைமுறை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவர் கடின உழைப்போடும் தன்னம்பிக்கையோடும் வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டவர்.

ஏன்னுடைய இனிய நண்பரான அவரை நான் அடிக்கடி வெள்ளவத்தை கின்றூஸ் கடல்கரை பகுதியில் சந்திப்பதுண்டு. காலை நேர உடற் பயிற்சி நடையின் போது நடக்கும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியானதும் நகைச்சுவை மிக்கதுமாக அமைந்திருக்கும். கலாநிதி உவைஸ் அஹமட் கொழும்பு சென் மெத்தியூஸ் கல்லூரியில் கல்வி பயின்றவர். பாடசாலைக் கல்வி முடிந்த கையுடன் ஒரு ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கியவர்.

அதனைத் தொடர்ந்து அவர் (ஆங்கிலம் பொருளாதாரம் மற்றும் தத்துவயியலில்) தனது கலைமாணி பட்டத்தைப் பெற்றார். ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அதி உயர் தகைமைகளுடன் அவர் சித்தி அடைந்தார். பின்னர் பட்டப் பின் படிப்பு டிப்ளோமா நெறியை எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் பிரயோக மொழிகள் பிரிவில் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று தனது கலாநிதி பட்ட நெறியை கொலம்பியா பசுபிக் பல்கலைக் கழகத்தில் மேற் கொண்டார். இதன் பிரதான கருப் பொருளாக அமைந்தது கல்வியியல். அதன் பிறகு பாடசாலைகள் நிர்வாகம் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் மொரே கல்வி இல்லத்தில் இருந்து பட்டப் பின்படிப்பு டிப்ளோமாவை பெற்றுக் கொண்டார். மேலும் மலேஷியாவின் ஆசியா பசுபிக் ஒலிபரப்பு அபிவிருத்தி நிலையத்தில் இருந்து ஊடகக் கற்கைகள் தொடர்பான டிப்ளோமாவையும் பெற்றுக் கொண்டார்.

அவர் ஒரு ஆசிரியராக, பாடப் புத்தக எழுத்தாளராக, கல்வி அதிகாரியாக, ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக, கம்பளை சாஹிரா மற்றும் கொழும்பு சாஹிரா ஆகிய கல்லூரிகளின் அதிபராக, பாடவிதான அபிவிருத்தி மற்றும் ஆசிரியக் கல்விக்குப் பொறு;பான கல்விப் பணிப்பாளராக, மற்றும் இலங்கை ஊடகவியல் கல்லூரியின் பணிப்பாளராக பணிப்பாற்றி உள்ளார்

1978ல் கலாநிதி உவைஸ் அஹமட் யுனெஸ்கோ நிறுவனத்தால் கல்வி ஊடகம் மற்றும் கல்வித் தொழில்நுட்பம் என்பனவற்றுக்கான நிபுணராக நியமிக்கப்பட்டார். பாரிஸ் இல் உள்ள சர்வதேச கல்வித் திட்டமிடல் நிறுவனத்தின் (ஐஐநுP) ஆலோசகராகவும் பணியாற்றினார்.
1983ல் அவர் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியின் கீழ் நைஜீரியா, சாம்பியா, உகண்டா, எதியோப்பியா, பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் டொங்கா குடியரசில் அவர் தொடர்பாடல் மற்றும் முறைசார் கல்வி அபிவிருத்தி பிரிவில் ஆலோசகராகப் பணியாற்றினார். லண்டனில் உள்ள பொதுநலவாய செயலகத்தில் அவர் ஆசிரியக் கல்வி ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். அவுஸ்திரேலியா கன்பராவில் உள்ள தேசியப் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் விரிவுரையாளராகவும் அவர் பணியாற்றினார்.

அவர் ஓய்வு பெற்றதும் தனது சுயசரிதையை எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு விடயம்
“எனது தொழில்துறையில் நான் உச்சத்தை அடைந்து விட்டதாக நான் நம்புகின்றேன். எனது தொழிலின் ஒரு பகுதியாகவும் சில விஷேட கடமைகளுக்காகவும் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விஜயம் செய்து உலகை சுற்றி வந்துள்ளேன். இந்த நீண்ட கட்டாயப் பயணத்தின் ஆரம்பத்தைத் திரும்பிப் பார்க்கின்ற போது சுவாரஸ்யமாக உள்ளது. மீண்டும் நான் எனது வாழ்க்கைப் பயணத்தில,; நான் கடந்து வந்த படிகளை எனது பேனா முனைகளின் ஊடாக ஒரு வெற்றுக் காகிதத்தின் முன்னாள் இருந்து கொண்டு எனது கதை தனது வாழ்க்கைப் பயணத்தில் விதிவழியாக பல மாற்றங்களை சந்திக்கவுள்ள ஏனைய இளைஞர் யுவதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்ற நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்கின்றேன்”
எமது நாடும் எமது சமூகமும் அடுத்தடுத்து இரு பெரும் புத்தி ஜீவிகளை இந்துள்ளது. ஒருவர் கலாநிதி உவைஸ் அஹமட் மற்றவர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி. இவ்விரு இழப்புக்களும் ஈடு செய்ய முடியாதவை.
லத்தீப் பாரூக்

Post Disclaimer

Disclaimer: இளைய தலைமுறையினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய கலாநிதி உவைஸ் அஹமட் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *