இவ்வாண்டின் மார்ச் மாதத்துடன் லிபியாவின் மீது சர்வதேச மனித உரிமைக் காவலர்களான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியும் இணைந்து தாக்குதல் நடத்தி பத்தாண்டுகள் பூர்த்தியாகி உள்ளன. இதன் விளைவு ஆபிரிக்காவின் எண்ணெய் வளம் மிக்க செல்வந்த நாடான லிபியா இன்று கொலை களமாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் செல்வத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்த லிபியா மக்கள் இன்று எதிர்கால நம்பிக்கைகள் எதுவும் இன்றி அகதி முகாம்களுக்குள் முடங்கிப் போய் உள்ளனர்.
ஆபிரிக்காவில் ஆகக் கூடுதலான எண்ணெய் வளம் கொண்ட செல்வந்த நாடான லிபியாவில் மக்கள் ஆகக் கூடுதலான வாழ்க்கை வசதிகளையும் அனுபவித்து வந்தனர். எல்லா குடிமக்களுக்கும் இலவசக் கல்வியும் இலவச சுகாதார பராமரிப்பும் கிடைத்தது. சனத்தொகையில் 25 வீதமானவர்கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாகக் காணப்பட்டனர். லிபியாவின் வீதிகளில் பிச்சைக்காரர்களையே காண முடியாது. அந்த நாட்டில் வீடற்றவர்கள் என்றும் எவரும் கிடையாது.
ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் தாக்குதல் அந்த நாட்டை அழித்து சின்னாபின்னமாக்கியது. இஸ்ரேலைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களின் மூலம் அந்த நாட்டின் செல்வ வளங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. இன்று சவக்காடாக மாற்றப்பட்டுள்ள லிபியா பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்கள் ஈராக்கை பிளவு படுத்தியது போலவே லிபியாவையும் பிளவு படுத்தினர். அதன் மூலம் அங்கு மோசமான சிவில் யுத்தத்தை தூண்டிவிட்டு எண்ணெய் வளங்களை சூறையாடினர். அழிவையும் மரணத்தையும் பற்றி அவர்கள் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. மத்திய கிழக்கை கொந்தளிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர்கள் குறியாக இருந்தனர். அதற்காக அவர்கள் ஆயுத மோதல்களை அங்கு முடியுமான அளவுக்கு தூண்டி விட்டனர். இதனால் கடந்த சுமார் மூன்று தசாப்தங்களாக மறுபுறத்தில் அவர்களின் ஆயுத விற்பனையும் அமோகமாக இடம்பெற்று வருகின்றது.
லிபியா சுமார் ஏழு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஒரு நாடு. அதன் தேசிய திறைசேரியில்; 105 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் இருந்தன. அன்றைய லிபியா ஜனாதிபதி கதாபியின் குடும்பம் லிபியாவின் எண்ணெய் வளத்தின் மூலம் சேர்த்த சொத்துக்களில் ஒரு பகுதியை கிட்டத்தட்ட 40 நாடுகளில் பதுக்கி வைத்திருந்தது.
அரபு வசந்த எழுச்சிக் காலப்பகுதியில் டுனிஷியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி லிபிய மக்களுக்கும் சுதந்திரம் மற்றும் நீதி என்பனவற்றின் மீதான ஆசையைத் தூண்டியது. ஆனால் கதாபியோ தனது சகா சிரியாவின் அஸாத்தைப் போலவே இரும்புக் கரம் கொண்டு மக்களின் குரல்வளையை நசுக்கினார்.
பதிலுக்கு லிபியா மக்கள் கதாபியிடம் இருந்து தப்ப உலகின் உதவியை நாடினர். இந்த உண்மையான கோரிக்கை எவர் காதிலும் விழவில்லை. மாறாக யுத்த வெறியர்கள் லிபியாவை சூறையாடும் தமக்கே சொந்தமான திட்டத்தோடு அதை அமுல் செய்வதற்கான சந்தர்ப்பத்துக்காக் காத்திருந்தனர்.
தமது நாசகாரத் திட்டத்துக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள அமெரிக்காவும் அதன் சகாக்களும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை நாடினர். அதன் முடிவு 2011 மார்ச் 17இல் 1973ம் இலக்கம் கொண்ட தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் லிபிய வான் பரப்பு விமான சூனிய வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அதை யுத்த வெறியர்கள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர். இந்தத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறிய ஒரு பிரகடனம் என பலர் கருத்து வெளியிட்டனர்.
தீர்மானம் 1973ன் படி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க காங்கிரஸின் ஆதரவைப் பெறாமலேயே லிபியா மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டார். அதன் பிறகு பலம் மிக்க நாடுகள் ஒவ்வொன்றாக லிபியாவைப் பதம் பார்த்தன. மனித வரலாற்றில் அதி நவீன விமானங்களையும் மிக மோசமான அழிவினை உண்டாக்கும் ஆயுதங்களையும் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலாக இது அமைந்தது.
மனித உரிமை செயற்பாட்டாளர் அஹமட் தயராக்கி இதுபற்றிக் குறிப்பிடுகையில் “அமெரிக்கப் படையினர் நினைத்திருந்தால் 24 மணி நேரத்தக்கும் குறைவான காலப்பகுதியில் கதாபியின் கதையை முடித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரி;க்கா தலைமையிலான நேட்டோ படையினர் கதாபியை பதவியில் இருந்து அகற்ற உதவுவார்கள் என்று நம்பிய லிபியா மக்கள் கதாபியால் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அன்றைய பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்க்கோஸி எங்கே என்ற கேள்வியை எழுப்பினர். ஆனால் உண்மையில் சர்க்கோஸியால் அனுப்;பப்பட்ட ஒரு இரகசிய ஒற்றன்தான் கதாபியை பின்தொடர்ந்து சென்று கொன்றான் என்று பின்னர் வெளியாகிய தகவல்கள் கூறுகின்றன.
தனது நாசகார இராணுவ ஆக்கிரமிப்புக்கள் காரணமாக உலகளாவிய மட்டத்தில் அமெரிக்கா உருவாக்கிய மோதல் நிலைமைகள் அதனால் ஏற்பட்ட கண்டனங்கள் என்பன காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கதாபியை கொல்லும் விடயத்தை சர்க்கோஸியிடம் ஒப்படைத்தார்.
பொது மக்களைக் காப்பாற்ற நேட்டோ தவறியமை பற்றி லிபியாவின் கிளர்ச்சிப் பிரிவுத் படைத் தளபதி அப்துல் பத்தாஹ் யூனுஸ் நேட்டோ தமக்கு உறுதியளித்தபடி ஆயுதங்களை விநியோகிக்கத் தவறி விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியெறத் தொடங்கியதால் மாபெரும் மனித அவலமும் அங்கு ஏற்பட்டது. அந்த மக்களின் பரிதாப நிலை பற்றிய எவருமே கவலை படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது வேறு எந்த அமைப்போ கூட இது பற்றி வாய் திறக்கவே இல்லை.
ஆயிரக்கணக்கான லிபிய மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மத்தியதரைக் கடல் வழியாக படகுகள் மூலம் ஐரோப்பாவை நோக்கி பயணம் மேற்கொண்டனர். உலகின் மிகவும் ஆபத்தான் கடல்வழி படகுப் பயணம் இதுவென்பதை தெரிந்து கொண்டே வேறு வழியின்றி அவர்கள் அதைத் தெரிவு செய்தனர். மிலேசந்சத்தனமான அரக்கர்களான மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கி அவர்களால் நடத்தப்பட்ட படகுப் பயணங்களைத் தான் மக்கள் தெரிவு செய்தனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் இந்தப் பயணத்தைப் பூர்த்தி செய்யாமல் கடலுக்குள்ளேயே சமாதி அடைந்தனர். எஞ்சியவர்கள் கடத்தல்காரர்களிடமும், காடையர்களிடமும் , படையினரிடமும் பிடிபட்டு அவலங்கள் நிறைந்த தடுப்பு முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர்.
பொது மக்கள் லிபியாவில் இருந்து வெளியேறுவது பொதுவான விடயம் ஆயிற்று. பொஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், ஈராக் வரிசையில் லிபியாவும் இணைந்தது. கடந்த காலங்களில் லிபியா குடியேற்றவாசிகளின் பிரதான மாற்று நிலையமாக மாறி உள்ளது. அதேபோல் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை உள்ளடக்கிய பகுதியில் வறுமைக்கான கேந்திர நிலையமாகவும் லிபியா மாறி உள்ளது.
அண்டைய ஆபிரிக்க நாடுகளில் பல வருடங்களாக ஆயுதங்கள் வழங்கி பயிற்சியளிக்ப்பட்ட லிபியா இளைஞர்கள், ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தமக்குப் பெற்றுத் தருவாகள் என்று அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் நம்பியமைக்கான விலையையும் செலுத்த வேண்டி இருந்தது.
இந்த மனிதப் பேரவலத்தின் மூலம் இறுதியான நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயுத உற்பத்தித் துறையினரே. இவர்களோடு எண்ணெய் வளங்களை, நிதி வளங்களை சூறையாடுபவர்கள் உட்பட ஏனைய கூட்டாண்மை ஜாம்பவான்களும் அவற்றைப் பங்கு போட்டுக் கொண்டனர்.
சில தகவல்களின் பிரகாரம் அமெரிக்கா மட்டும் லிபியாவில் இருந்து 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியாக தங்கத்தை சூறையாடி உள்ளது.
இதில் மிகப் பெரிய நன்மை அடைந்த மற்ற தரப்பு இஸ்ரேல் ஆகும். மத்திய கிழக்கையும் முஸ்லிம் நாடுகளையும் சின்னாபின்னமாக்கும் அதன் கனவு இங்கு இனிதே நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் சமூக சுகாதார விவகாரத்துக்கான அலுவலகத்தின் அறிக்கை ஒன்றின் படி லிபியா மிகப் பெரிய மனித அவலத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு அறிக்கையின் பிரகாரம் சுமார் பத்து வருடங்களுக்கு முன் அரபு வசந்தத்தின் மூலம் உருவான மோதல்களில் மிகவும் சிக்கலான மோதல் ஏற்பட்ட இடமாக லிபியா அமைந்துள்ளது. கதாபியின் மறைவுக்குப் பின் லிபியா ஒவ்வொரு வருடமும் மிக மோசமான குழப்பங்களையும் சரிவுகளையும் நோக்கியே சென்றுள்ளது. அது தற்போது மனிதக் கடத்தல் மற்றும் கொள்ளை அடிப்பதில் மட்டுமே தங்கி உள்ள ஆயுதம் ஏந்திய நபர்களுக்கும் குழுக்களுக்கும் சொர்க்கபூமியாக மாறி உள்ளது.
தற்போது இரு பெரும் ஆயதக் குழுக்களுக்கு இடையில் மோதல்களுடன் கூடிய இரண்டு அரசுகள் அமைந்துள்ளன. இவை இரண்டுக்கும் தனித்தனியான ஆயுதப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் கூலிப்படையினரும் வெளிநாட்டுக்கு வால் பிடிப்பவர்களும் உள்ளனர்.
Post Disclaimer
Disclaimer: லிபியா மீது ஐரோப்பிய அமெரிக்க தாக்குதல் இடம்பெற்று பத்து ஆண்டுகள் : ஆபிரிக்கா கண்டத்தின் செல்வந்த மக்கள் பிச்சைக்காரர்களாகவும் அகதிகளாகவும் மாற்றப்பட்டனர் - லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view