சர்வாதிகாரப் போக்குடைய வளைகுடா பெற்றோலிய ஷேக்மார் கடந்த பல தசாப்தங்களாகவே இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைப் பேணி வந்துள்ளனர். தற்போது தமது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களின் நெருக்குதல்கள் காரணமாக வெளிப்படையாகவே தமது கதவுகளை இஸ்ரேலுக்கு திறந்து விடத் தொடங்கி உள்ளனர். பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து வரும் அடக்கு முறைகள், ஜெரூஸலம் மீதான ஆக்கிரமிப்பு, பலஸ்தீனர்களின் நில அபகரிப்பு, பலஸ்தீன மக்களின் வதிவிடங்களை தரைமட்டமாக்கல் என இஸ்ரேல் புரிந்து வரும் எண்ணற்ற அநியாயங்களுக்கு மத்தியில் இந்த வெளிப்படை உறவுகளும் தொடருகின்றன.
இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளைத் தொடங்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி அறிவித்தது. பஹ்ரேன் அதனைப் பின் தொடர்ந்தது. ஒமானில் இருந்து எந்த நேரத்திலும் அந்த அறிவிப்பு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் யுத்தங்களின் தீவிரப் பங்காளியான சவூதி அரேபியா பல தசாப்தங்களாக இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளை மிக நெருக்கமாகக் கொண்டுள்ளது.
தனது சுய இருப்புக்காக அமெரிக்காவில் தங்கி இருக்கும் சவூதி அரேபியாவின் 84 வயதான மன்னர் சல்மான் வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் இயல்பு நிலையை ஏற்படுத்துவதை வெகுவாக ஆதரித்துள்ளார். அவர் செப்டம்பர் மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஈரானை மிகக் கடுமையாகச் சாடி உள்ளார்.
இன்றைய நிலைமைகள் பற்றி கருத்து வெளியிட்டுள்ள வாஷிங்டனில் உள்ள ஆராய்ச்சி மற்றும் கொள்கை கற்கைகளுக்கான அரபு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலீல் அல் அனானி “இது அமெரிக்க இஸ்ரேல் எஜமானர்களின் ஒரு கூட்டணி. ஐக்கிய அரபு இராச்சியம் என்ற அடிமை இஸ்ரேலின் பிராந்திய மேலாதிக்கத்தை தனது நிதி உதவியுடனும் ஊக்குவிப்புடனும் உறுதி செய்து கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏண்ணெய் வளத்தில் அபிவிருத்தி கண்டிருந்த ஈராக்கையும் லிபியாவையும் சூறையாடி சின்னாபின்னப்படுத்தி சிரியாவை ஒரு கொலைகளமாக மாற்றி, சுமார் 35 மில்லியன் மக்களை அகதிகளாக்கி முகாம்களுக்குள் முடக்கிய அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய, இஸ்ரேல் கூட்டணி எஞ்சியுள்ள வளைகுடா நாடுகளை ஈரானுடனான ஒரு யுத்தத்துக்கு இட்டுச் செல்லுமா? ஏன்பதே இன்றைய பிரதான கேள்வியாகும். அவ்வாறு நடந்தால் அது வளைகுடா ஷேக்மார் தற்கொலை புரிந்து கொள்வதற்கு சமமாக அமைந்து விடும்.
இஸ்ரேலின் அடுத்த இலக்கு ஈரானை அழிப்பதாகும். அமெரிக்காவில் அரசியல்வாதிகளையும் அரசுகளையும் உருவாக்குவதும் இல்லாமல் ஆக்குவதும் யூதர்கள்தான். அவர்கள் தற்போது ஈரானின் அணு வளங்களைத் தகர்த்து அழிக்கும் நோக்கில் அந்த நாட்டுக்கு எதிரான ஒரு யுத்தத்துக்கான முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஈரான் கடைசி வரைப் போராடும் ஆற்றல் கொண்ட ஒரு நாடு என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.
சுவிஷேச கிறிஸ்தவரான அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பெம்பியோ இது தொடர்பாகக் கூறுகையில் ‘வளைகுடா நாடுகளுடன் இயல்பு நிலையை ஏற்படுத்துவது என்பது ஈரானுக்கு எதிரான ஒரு இராணுவ கூட்டணியை உருவாக்குவதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். பெய்ரூட்டில் உள்ள முரண்பாடுகள் மன்றத்தின் லெஸ்டெயார் குறூக் என்பவர் ‘சமாதான உடன்படிக்கை என்பதில் இருந்து மிக தூரம் விலகிச் சென்று பாலுக்கும் தேனுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மத்திய கிழக்குப் பிராந்தியத்தை ஒரு யுத்த களமாக மாற்றுவதற்கு இந்த உடன்படிக்கைகள் வழிவகுக்கின்றன. வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலைக்கும் யுத்தத்துக்குமான ஒரு புதிய யுகத்தை இது ஆரம்பிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாவில் தனது பிரசன்னத்தின் மூலம் இஸ்ரேல் ஈரானின் மேற்குப் பகுதி எல்லையில் காணப்படும். ஈரானுக்கு ஒரு அச்சுறுத்தலாக இது அமையும். இந்தப் பிராந்தியத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு சதிமுயற்சி அச்சுறுத்தலாகவே வளைகுடா நாடுகளுடனான இஸ்ரேலின் சமாதான உடன்படிக்கையை ஈரான் நோக்குகின்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆள்புல நிலப்பரப்புக்களை பயன்படுத்தி இஸ்ரேல் ஈரானின் வளங்களை வேவு பாhக்க தொடங்கலாம். மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஈரானிய சமூகத்தவர்களை வளைத்துப் போட்டு ஈரானுக்குள்ளும் சமூக ரீதியாக ஊடுறுவி குழப்பங்களை விளைவிக்க இஸ்ரேல் முயலும்.
1988 ஈரான் ஈராக் யுத்தத்துக்குப் பிறகு ஈராக் வெற்றிவாகை சூடியதாக அறிவித்ததோடு தான் யுத்தத்தை கண்டு சளைக்காத ஒரு நாடு என்ற ரீதியிலும் தன்னை ஸ்தாபிக்க முனைந்தது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்காவும் இஸ்ரேலும் அவர்களின் ஐரோப்பிய பங்காளிகளும் ஈராக்கை துவம்சம் செய்ய முடிவு செய்தனர். இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாகத் தான் அன்றைய ஈராக் அதிபர் சதாம் ஹ{ஸைன் குவைத் மீது படையெடுப்பு நடத்தி அந்த நாட்டை ஆக்கிரமிக்க தூண்டப்பட்டார். சதாம் ஹ{ஸைனின் படைகள் குவைத்தை ஆக்கிரமித்தால் அமெரிக்கா அதில் தலையிடாது என்றும் அதை ஒரு அரபு நாட்டுக்கும் இன்னொரு அரபு நாட்டுக்கும் இடையிலான விவகாரமாகவே அமெரிக்கா பார்க்கும் என்றும் பக்தாத்தில் உள்ள தனது தூதுவர் ஏப்பிரல் கஸ்பீ மூலம் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த உறுதியை முழுமையாக நம்பி உற்சாகம் அடைந்த சதாம் ஹ{ஸைன் குவைத்தை ஆக்கிரமித்து தனது நாசத்துக்கு தானே தொடக்கப் புள்ளி வைத்தார். இந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த அமெரிக்க ஐரோப்பிய சக்திகள் இஸ்ரேலுடன் இணைந்து தமக்கு சாதகமாக முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டன. அதன் விளைவு ஈரக்கிலும் குவைத்திலும் இடம்பெற்ற எண்ணற்ற மரணங்கள், ஈடற்ற அழிவுகள், நினைத்துக் கூடப் பாhக்க முடியாத நாசங்கள் எனத் தொடர்ந்தன.
இதில் மிகவும் பரிதாபகரமான விடயம் இந்த யுத்தத்தின் முழு செலவையும் அரபு ஷேக்மாரின் தோள்களிலேயே கட்டிவிட்டனர் சதிகாரர்கள். சவூதி அரேபியா மட்டும் இந்த யுத்தத்துக்காக 75 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டதாக பஹ்ரேனில் உள்ள முக்கிய வர்த்தகப் புள்ளி ஒருவர் ஒரு தடவை என்னிடம் குறிப்பிட்டார். அன்று முதல் தான் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், ஒமான், பஹ்ரேன், கத்தார் ஆகிய ஆறு அரபு வளைகுடா நாடுகளும் முற்று முழுதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பிடியின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இதன் தொடர் இன்று வளைகுடா நாடுகளின் எந்தத் தலைவரும் அமெரிக்காவின் ஆதரவின்றி தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மேல் மட்டத்தில் தான் மன்னர்களாக இருக்கின்றனர். அடி மட்டத்தில் அவர்கள் தமது மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு இழந்த நிலையில் காணப்படுகின்றனர். பட்டம் பதவிகளை வகித்துக் கொண்டு இவர்கள் தமது செல்வத்தையே சூறையாடி வருகின்றனர் என்று அந்த நாடுகளின் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சுமார் நூறு வருடங்களாக இஸ்ரேல் இந்த உலகில் புரிந்து வரும் கொடுமைகள் காரணமாக மக்கள் மத்தியில் அந்த நாட்டுக்கு எதிரான பெரும் வெறுப்பு நிலை காணப்படுகின்றது. இஸ்ரேலின் இந்த அநியாயங்களை கட்டுப்படுத்த வளைகுடாவின் கொடுங்கோல் மன்னர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் தான் வளைகுடாவில் இருந்து மத்திய கிழக்கு வரைக்கும் அங்கிருந்து வட ஆபிரிக்கா வரைக்கும் ஆட்சியாளாகள் மீது வெறுப்பு கொண்டவர்களாகவே மக்கள் காணப்படுகின்றனர்.
ஈரானுடன் அமெரிக்க இஸ்ரேல் யுத்தம் ஒன்று இடம்பெறும் பட்சத்தில் தவிர்க்க முடியாத விதத்தில் வளைகுடா நாடுகளும் அதில் பங்கேற்கும் நிலை ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படும். இதன் விளைவு அந்த நாடுகளுக்கு நாசமும் அழிவுமாகவே இருக்கும். மத்திய கிழக்கின் இன்றைய பரிதாப நிலை இதுதான். இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அரபு லீக் அமைப்பும் கண்டிக்கத் தவறியுள்ள நிலையில் பெரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு அந்த நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹென்றி கீசின்ஜர் முன்னர் ஒரு தடவை குறிப்பிடுகையில் ‘இஸ்ரேலின் ஆதிக்கத்தை இந்தப் பிராந்தியத்தில் நிலை நிறுதத வேண்டுமானால் மத்திய கிழக்கில் உள்ள ஏழு நாடுகள் அழிக்கப்பட வேண்டும்’ என்றார். தற்போது ஈராக், சிரியா, லிபியா, யெமன், லெபனான் என ஐந்து நாடுகளை துவம்சம் செய்யும் பணிகள் தொடருகின்றன. ஆனால் கடந்த ஐம்பது வருட காலத்தில் அளப்பரிய வளர்ச்சி காணத் தொடங்கியுள்ள வளைகுடா பிராந்தியம் முழுவதையும் அழித்துவிட அவர்கள் தற்போது எண்ணி உள்ளனர். அரபுலகின் வெற்கம் கெட்ட கொடுங்கோலர்கள் தமது பிராந்தியத்தை நாசப்படுத்தும் அமெரிக்காவின் தற்போதைய திட்டத்துக்கு ஒத்துப் போவது தான் பெரும் கவலைக்கும் பரிதாபத்துக்கும் உரிய விடயமாகும். நிச்சயம் இவர்கள் அமெரிக்காவின் எதிர்கால நாசகாரத் திட்டத்தோடும் ஒத்துப் போவார்கள் என்றே நம்பத் தோன்றுகின்றது.
Post Disclaimer
Disclaimer: வளைகுடா ஷேக்மார் இஸ்ரேலுக்கு தமது கதவுகளைத் திறந்து விடுவது வளைகுடா நாடுகளின் பங்குபற்றலோடு அமெரிக்க இஸ்ரேல் தலைமையில் ஈரானுக்கு எதிரான யுத்தத்துக்கு வழிவகுக்குமா? லத்தீப் பாரூக் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view