ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஈராக்கில் பிரிட்டன் புரிந்த யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது

Spread the love

லத்தீப் பாரூக்
நெதர்லாந்தை தளமாகக் கொண்டு செயற்படும் ஐஊஊ என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈராக்கில் 2003 முதல் 2009 வரையான காலப்பகுதியில் பிரிட்டனால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றிய ஆரம்ப கட்ட விசாரணைகளை முடித்துக் கொள்ளவுள்ளதாக 2020 டிசம்பர் 9ம் திகதி அறவித்துள்ளது.

மேற்குலகில் உள்ள யூத சக்திகளின் ஆதரவோடு பிரிட்டனும் அமெரிக்காவும் 2003ல் ஈராக்கை ஆக்கிரமித்தன. அன்று ஈராக் அந்தப் பிராந்தியத்தில் பெரும்பாலும் அபிவிருத்தி கண்ட ஒரு நாடாகவே இருந்தது. ஆனால் அதன் கடும்போக்கு ஆட்சியாளர் சதாம் ஹ{ஸைன் பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகக் கூறிக் கொண்டு இந்தப் படை எடுப்பு நடத்தப்பட்டது.

ஆனால் இது ஒரு போலிக் குற்றச்சாட்டு என பின்னர் நிரூபிக்கப்பட்டது. எவ்வாறேனும் இந்தப் பொய்யை சந்தைப்படுத்திக் கொண்டு தான் ஈராக்கில் உள்ள எண்ணெய் வளத்தையும் தங்கச் செல்வத்தையும் சூறையாடும் நோக்கில் அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தப் படை எடுப்பை நடத்தின. ஈராக்கின் அழிவு மறுபுறத்தில் மத்திய கிழக்கை துவம்சம் செய்வதற்காக தங்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதி செய்தது.

இந்த ஆக்கிரமிப்பின் போது முழு ஈராக் மீதும் குண்டு மழை பொழிந்து மொத்த நாடும் தரைமட்டமாக்கப்பட்டது. தனது எண்ணெய் வளத்தின் மூலம் ஈட்டிய செல்வத்தால் அந்த நாடு கட்டி எழுப்பிய நவீன கட்டமைப்புக்கள் அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. மில்லியன் கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கதறக் கதறக் கொல்லப்பட்டனர். ஏனையோர் அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் அந்த முகாம்களுக்குள் அவலமான முறையில் முடக்கப்பட்டுள்ளனர். எகிப்தின் முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளர் ஹொஸ்னி முபாரக் உற்பட வளைகுடாவின் ஷேக்மார் அனைவரும் இந்தப் பாவத்தின் பங்காளிகள் ஆவர்.

அமெரிக்காவும் பிரிட்டனும் இங்கு எல்லை கடந்த யுத்தக் குற்றங்களைப் புரிந்தன. அதன் பிறகு ஏற்பட்ட சர்வதேச அழுத்தத்தின் காரணமாக ஐஊஊ இந்த இன ஒழிப்புக்கும் யுத்தக் குற்றங்களுக்கும் காரணமானவர்களுக்கு எதிரான விசாரணைகளையும் வழக்குகளையும் தொடர்ந்தது. 1998இல் உருவாக்கப்பட்ட ஐஊஊ இல் பிரிட்டனுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெற்றன.

ஈராக்கில் பிரிட்டிஷ் படைகள் இழைத்த யுத்தக் குற்றங்களின் அடிப்படையில் அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய தனது உயர் மட்ட அதிகாரிகளை பிரிட்டன் மறைத்து வைத்து பாதுகாக்க விரும்பவில்லை. அந்த விடயத்தில் அப்பட்டமாகவும் ஆக்ரோஷமாவும்; பிரிட்டன் செயற்பட்டது. ஆனால் மறுபுறத்தில் ஈராக்கில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களையும் அவர்களின் சாட்சிகளையும் குறிவைத்து பிரிட்டன செயற்பட்டது. அவர்களின் சாட்சிகள் மற்றும் சான்றுகளையும் அவற்றின் பெறுமானங்களையும் அழித்துவிடும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது இதற்கு முன்னர் ஒருபோதும் மேற்கொள்ளப்படாத ஒரு நடவடிக்கையாகும் இருந்தாலும் இன்றும் கூட பிரிட்டனுக்கு எதிரான பல வழக்குகளைக் கையாள இதே நடைமுறையைத் தான் பிரிட்டன் பின்பற்றி வருகின்றது.

வேண்டுமென்றே கொலை செய்வதுடன் தொடர்புடைய யுத்தக் குற்றங்கள், சித்திரவதை, மனிதாபிமானமற்ற கொடூரமான விதத்தில் மனிதர்களை நடத்துதல், தனிமனித கௌரவத்தைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளல், கற்பழிப்பு மற்றும் ஏனைய வகையிலான பாலியல் குற்றங்கள் என பல்வேறு விதமான குற்றங்களை பிரிட்டிஷ் படைகள் புரிந்துள்ளதாக அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. மேலும் பல்வேறு மட்டங்களிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட சிவிலியன் கண்கானிப்பு மற்றும் இராணுவக் கட்டளைகளின் உதாசீனம் என்பனவும் பிரிட்டிஷ் படைகள் ஈராக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு எதிராக குற்றங்கள் புரியவும் வழியமைத்துள்ளதாக அந்த அறிக்கைகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
184 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் ஐஊஊ வழக்குத் தொடுனர் பேடோ பென்சோடோவின் அலுவலகம் தனது முதல் கட்ட ஆய்வுகளின் முடிவுகளைத் தந்துள்ளது. இந்த விசாரணை இப்போதைக்கு முடிவடைந்துள்ளதாகவும் பூரண விரிவான விசாரணைகள் ஆரும்பிக்கப்படப் போவதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக ஐஊஊ யுத்தக் குற்றங்கள் பற்றிய பூரண விசாரணைக்கான அதற்கே உரிய நடைமுறைகளைகப் பின்பற்றத் தவறிவிட்டது. விடுபாட்டு உரிமை இடைவெளியை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட குற்றவியல் நீதிமன்றம், உயர் மட்ட அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்த உருவாக்கப்பட்ட ஐஊஊ பிரிட்டிஷ் படையினரை தனது பிடியில் இருந்து விடுவித்துள்ளது.

யுத்தக் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள புஷ்ஷ{ம், பிளாயரும் (இடது) சின்னாபின்னமாக்கப்பட்ட பக்தாத் நகரம் (வலது).
பேடோ பென்சோடோவின் கூற்றுப்படி இந்த விடயம் அழுகிய ஒரு சில ஆப்பிள்களின் வழக்கல்ல என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் நிறுவன ரீதியான நடவடிக்கைகளில் இருந்து அவர் தவறி உள்ளார். மேலும் பல்வேறு மட்டங்களிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட சிவிலியன் கண்கானிப்பு மற்றும் இராணுவக் கட்டளைகளின் உதாசீனம் என்பனவும் பிரிட்டிஷ் படைகள் ஈராக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு எதிராக குற்றங்கள் புரியவும் வழியமைத்துள்ளதாக அந்த அறிக்கைகளில் அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

சர்வதேச நீதித்துறையின் நீண்டகால இரட்டை வேடப் போக்கை இது மீண்டும் கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் சித்திரவதைகளை செய்தாலும் கூட சக்திமிக்கவர்கள் அவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை இது மீண்டும் உறுதி செய்துள்ளது. ஐஊஊ எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த விடுபாட்டுரிமை இடைவெளியை நீக்க இந்த விசாரணைகள் தவறி உள்ளன. ஐஊஊ குற்றவியல் விசாரணைகளை நியாயமாக்குவதற்கும், போர்க்குற்றங்கள் மற்றும் உயர் மட்ட சித்திரவதைகளில் ஈடுபட்டவர்கள் அவற்றில் இருந்து தப்பிக் கொள்வதை தடுப்பதற்கும் நீதியின் தேவைப்பாடு அவசியம் என்ற உறுதியான முடிவுக்கு இனி நாடுகள் தான் வர வேண்டும். பென்சோடோவின் பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஐஊஊ தவறான திசையில் ஒரு கூரிய திருப்புமுனைக்கு வந்தது.

இதுபற்றி எழுத்தாளரும், ஒலிபரப்பாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் 2002 ஆகஸ்ட் முதல் 2004 அக்டோபர் வரை உஸ்பகிஸ்தானில் பிரிட்டிஷ் தூதுவராகவும், 2007 முதல் 2010 வரை டியுண்டீ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் இருந்த கிரய்க் முரே தான் எழுதிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
ஈராக்கில் பிரிட்டிஷ் படைகள் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் பற்றிய ஐஊஊ அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனால் ஒரு சக்திமிக்க மேலைத்தேச நாடொன்றின் மீதான ஐஊஊ இன் போக்கு அதை விட உண்மையில் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் பிரிட்டிஷ் படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வரும் ஐஊஊ இன் தீர்மானம் நியாயம் கிடைக்க வேண்டியவர்களுக்கு அந்த நியாயம் கிடைக்க ஒரு கருவியாகவோ நிறுவனமாகவோ ஐஊஊ திகழும் என்று இதுவரை இருந்து வந்த நம்பிக்கைகளையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறப்படும் 184 பக்க அறிக்கையை நான் முழுமையாக வாசித்தேன். அது உண்மையில் அதிர்ச்சி அளிக்கின்றது. பிரிட்டிஷ் யுத்தக் குற்றங்களின் மேலோட்டமான விளக்கமே பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் போக்கை அது தெளிவாகப் புடம் போட்டுக் காட்டியுள்ளமை உண்மையில் பிரிட்டனின் யுத்தக் குற்றங்களை விட அதிர்ச்சி அளிக்கின்றது.
அந்த அறிக்கையின் நகலை பிரிட்டிஷ் அரசாங்கமே தயாரித்திருக்கலாம் என்ற நியாயமான சந்தேகமும் எனக்குள் உள்ளது. வேறு யாரும் அதை செய்திருக்க முடியாது. இன்றைய அமெரிக்க அரசால் கூட அது சாத்தியப்பட்டிருக்காது. ஈராக் யுத்தத்தின் ஆரம்பத்தை நியாயப்படுத்தி தெளிவு படுத்தும் வகையில் ஒரு பந்தியை இணைக்க வேண்டும் என்ற யோசனை வேறு யாருக்குத் தான் வந்திருக்க முடியும்.

இந்த விமர்சனம் அந்த முழு ஆவணத்துக்கும் பொருந்துகின்றது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு பரிச்சயமான மொழி நடையிலேயே அது அமைந்துள்ளது. அதில் எல்லாமே பிரிட்டிஷ் இராணுவத்தின் கண்களின் ஊடாகத் தான் பார்க்கப்பட்டுள்ளது என்று கிரய்க் முரே தனது ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Post Disclaimer

Disclaimer: ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஈராக்கில் பிரிட்டன் புரிந்த யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *