சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் பஷர் அல் அஸாத்தை மீண்டும் அரபு லீக் அமைப்புக்குள் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரபு லீக் என்பது வெறுமனே கொடுங்கோல் ஆட்சியாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பே தவிர வேறொன்றுமில்லை. இருந்தாலும் சிரியாவை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான சரியான உடன்பாடு இன்னமும் எட்டப்படவில்லை என்று அரபு லீக்கின் செயலாளர் நாயகம் அஹமட் அபுல் கெயிட் தெரிவித்துள்ளார்.
அரபு லீக்கில் சிரியாவின் அங்கத்துவம் 2011ல் இடைநிறுத்தப்பட்டது. 2011 அரபு வசந்த எழுச்சியை அடுத்து, அந்த நாட்டில் தற்போது தீவிரம் அடைந்துள்ள சிவில் யுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அஸாத் புரிந்த யுத்தக் குற்றங்களுக்காகத் தான் இந்த இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சிரியாவின் சிறுபான்மை ஷீஆ சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அஸாத் இந்தப் போராட்டங்களுக்கு பதிலாக பெரும்பான்மை சுன்னாஹ் பிரிவைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதை செய்து வந்தார். இதன் நடுவே அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல், ரஷ்யா, ஈரான், சவூதி அரேபியா என்பன உற்பட இன்னும் சில வளைகுடா நாடுகளும் இந்தப் பிரச்சினைக்குள் மூக்கை நுழைத்தன. இதன் விளைவாக பெரும்பாலும் அபிவிருத்தி கண்டிருந்த இந்த நாடு இன்று கொலைகளமாக மாற்றப்பட்டு மயான பூமி ஆக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல்களில் இருந்து தப்பிய பலர் இன்று அண்டை நாடுகளிலும் ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால் அமெரிக்காவாலும் அதன் அரபு நாட்டு கைக்கூலிகளாலும் பாதுகாக்கப்பட்டு வரும் அஸாத் இதுவரை எந்தப் பிரச்சினையும் இன்றி பதவியில் இருந்து வருகின்றார். உண்மையில் ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளாக ஆக்கி;ரமித்து அந்த நாடுகளை ஒவ்வொன்றாக மயான பூமிகளாக மாற்றி வரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு அஸாத் பெரும் சேவகம் புரிந்து வருகின்றார் என்று தான் கூற வேண்டும்.
அஸாத்தும் அவரது ஆட்சியும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு உலகாலும் இஸ்ரேலாலும் பாதுகாக்கப்பட்டு வருவதற்கு இதுவே பிரதான காரணமும் ஆகும்.
இங்கு நடக்கும் அட்டூழியங்கள் பற்றி வர்ணித்துள்ள பத்தி எழுத்தாளர் ஸகி காப் அல் கஸால் சிரியாவில் ஓடும் பிரதான நதிகள் இரண்டையும் நிரப்பும் அளவுக்கு தேவையான இரத்தத்தை அஸாத் சிந்த வைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை சுமார் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன. மேலும் லட்சக் கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கு முன்னிருந்த நாட்டின் சனத் தொகையான 23 மில்லியனில் பெரும்பாலானவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிதறுண்டு போய் காணப்படுகின்றனர்.
மிகவும் பிரபலம் அடைந்து வந்த அரபு வசந்த எழுச்சியின் விரிவாக்கமாகத் தான் சிரியா எழுச்சியும் ஆரம்பமானது. ஆனால் அது மோசமான போராட்டமாக மாற்றப்பட்டு இன்றைய நிலையில் உலகில் இதுவரை இடம்பெற்ற போராட்டங்களில் மிக மோசமாக நீடிக்கும் போராட்டமாகவும் ஆகிவிட்டது. மொத்தத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச ஆதிக்க சக்திகளுக்காக நடத்தப்பட்டு வரும் ஒரு யுத்தமாகவே அது இன்று பார்க்கப்படுகின்றது.
முதல் ஆறு மாத காலமாக அது சற்று அமதியான ஒரு போராட்டமாகவே இருந்தது. அதில் நேரடியாக ஈடுபட்டவர்களும் அதற்கு அதரவு வழங்கியவர்களும் ஏனைய செயற்பாட்டாளர்களும் பெரும்பாலும் வன்முறைகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொண்டனர். செயற்பாட்டாளர் கியாத் மதார் (சிறிய காந்தி என அழைக்கப்பட்டவர்) போன்றவர்கள் போராட்டத்தின் முதலாவது மாதத்திலேயே கடத்தப்பட்டார். அவர் வன்முறையை கடுமையாக எதிர்த்தவர். தங்களை நோக்கி வந்த படை வீரர்களை மதார் மலர்களைத் தூவி வரவேற்றார். ஆனால் பதிலுக்கு அஸாத்தின் படையினர் அவரைக் கடத்திச் சென்று கடைசியில் கொலை செய்தனர். இந்த போராட்டத்துக்கான அடிப்படையானது உருவகச் சங்கிலிகளிருந்து எப்போது விடுபடத் துடிக்கும் மனித ஆர்வத்தின் விளைவால் உருவான ஒன்றாகவே காணப்பட்டது. தாரா நகரின் சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களால் அது மேலும் தூண்டி விடப்பட்டது. ‘நீங்கள் தான் அடுத்த வைத்தியர்’ என்ற வாசகம் அதில் பிரதான இடம் பிடித்தது. அஸாத்துக்கு எதிரான அடுத்த கட்ட எழுச்சிப் போராட்டத்தை அறிவிக்கும் வகையில் இது அமைந்திருந்தது.
சிரியாவின் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய பல நாடுகள் கடைசியில் அந்த மக்களுக்கு துரோகமே இழைத்தன. 2013ல் கொஹோத்தா நகரில் படையினர் பாரிய அளவில் இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தியபோதும் அமெரிக்கா உற்பட உலக நாடுகள் அதை கண்டு கொள்ளவில்லை.
இந்த விடயத்தில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தமது வீட்டோ அதிகாரங்களைப் பாவித்ததால் சர்வதேச சமூகம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டது. ஈரான் மற்றும் இஸ்ரேல் என்பனவும் அஸாத்தின் படையினருக்கு பக்கபலமாக இருந்தமை மிகத் தெளிவாகப் புலப்பட்டது. அந்தப் படைகளை எதிர்த்து நின்றவர்களுக்கு வெறும் உதட்டளவிலான ஆதரவை மட்டுமே அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கின. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பிலும் சிரியா மக்கள் நம்பிக்கை இழந்தனர்.
இன்று அந்த நாடு பெரும்பாலும் சிதைவடைந்து போன ஒரு நாடாகவே காணப்படுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன் ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு நாடு போலவே உள்ளது. சிரியா மக்களை கொன்று குவித்து அவர்களின் இரத்தத்தில் நனைந்தவாறு பிடில் வாசித்துக் கொண்டிருக்கின்றார் அஸாத். கடந்த ஒரு தசாப்த காலமாக இந்நிலை நீடிக்கின்றது. அஸாத் அதிகாரத்தில் இன்னமும் ஒட்டிக் கொள்ளவோ அல்லது அதற்கு மேல் செல்லவோ எந்த தார்மிக உரிமையும் இல்லாதவர்.
இருந்தாலும் சிரியாவில் அச்சத்தின் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. அங்கு பல தியாகங்கள் புரியப்பட்டுள்ளன. இந்தப் புரட்சி வெறுமனே ஒரு கருத்தாகத் தான் ஆரம்பமானது. கருத்துக்கள் வெறுமனே செத்து மடிவதில்லை. அஸாத்தின் அதிகாரிகள் (கடைநிலை) மீதான சட்ட ரீதியான பொறுப்புக் கூறல் அபிவிருத்திகள் பல்வேறு நம்பிக்கைகளோடு சிரியா மக்கள் எதிர்காலத்தை நோக்கும் வாய்ப்புக்களை வழங்கி உள்ளது. வசந்தம் சாசுவதமானது என நம்பத் தொடங்கி உள்ளனர். சமாதானத்துக்கும் நீதிக்குமான போராட்டம் தொடருகின்றது.
இதனிடையே சிரியாவின் சுமார் எட்டு லட்சம் அகதிகளுக்கு இடமளித்துள்ள ஜெர்மனி அஸாத் அரசுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளைத் தொடங்கி உள்ளது. ஒரு கொடுமையான அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த மக்கள் மத்தியில் இது புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்துள்ளது.
டிம் என்டர்ஸன் என்பவர் எழுதி உள்ள சிரியாவில் இடம்பெற்று வரும் அசிங்கமான யுத்தம் ஆட்சி மாற்றமும் எதிர் போராட்டமும் எனும் தலைப்பிலான நூலுக்கு எழுதப்பட்டுள்ள விமர்சனத்தில் சிரியா மீது அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அவற்றின் பொம்மை அரசுகளும் கட்டவிழத்து விட்டுள்ள பினாமி யுத்தத்தின் உண்மைக் கதை இதுவாகும். ஒரு நாட்டை எப்படி அழித்து சின்னாபின்னமாக்கலாம் அதன் பிறகு அதுபற்றி எவ்வாறு பொய் உரைக்கலாம் என்று கூட இதற்கு பெயரிட்டிருக்கலாம். மத்திய கிழக்கில் வாஷிங்டனால் அழிக்கப்படுவதற்கான பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகளில் ஒன்று தான் சிரியா. உலகின் தென் பகுதி முழுவதும் நூறாண்டுகளுக்கு மேலாக இதுதான் நடந்து வருகின்றது. இந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களானது குறிப்பாக இந்த விடயத்தில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் பிரசார யுத்தத்தைப் புரிந்து கொள்ளப் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு அமெரிக்கா வழங்கி வருகின்ற ஆதரவை மறைப்பதற்கான பிரசாரங்களில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதற்காக சிரியாவை அது பயன்படுத்தி வருகின்றது. இந்தப் பிரசாரத்தை முன்னெடுத்தச் செல்வதில் அமெரிக்காவுக்கு மேற்குலக நாடுகளின் பிரதான பிரிவு ஊடகங்களின் ஆதரவு மட்டும் கிடைத்துள்ளதாக எண்ணக் கூடாது மாறாக அந்த நாடுகளின் மனித உரிமை அமைப்புக்கள் என்று சொல்லப்படுகின்ற முன்னணி அமைப்புக்களின் ஆதரவும் சேர்த்தே கிடைத்து வருகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே பஷர் அல் அஸாத்தை தான் ஐக்கிய அரபு அமீரகமும் மத்திய கிழக்கில் உள்ள ஏனைய அமெரிக்க ஐரோப்பிய இஸ்ரேல் கைக்குலிகளும் மீண்டும் அரபு லீக்கில் இணைத்தக் கொள்ள முயற்சிக்கின்றனரா? பிரிட்டன் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய சக்திகளால் பதவியில் அமர்த்தப்பட்டு மத்திய கிழக்கை ஆட்சி செய்து வரும் கொடுங்கோல் ஆட்சியாளர்களினதும் அரசுகளினதும் சோகமான அரசியல் நிலையை வெளிப்படுத்துவதாகவே இது அமைந்துள்ளது.
Post Disclaimer
Disclaimer: அரபு லீக் அமைப்புக்குள் சிரியா ஜனாதிபதி அஸாத்தை மீண்டும் இணைத்துக் கொள்ளும் முயற்சி : மத்திய கிழக்கு அரசியலின் சோகமான நிலவரத்தை வெளிப்படுத்துகின்றது - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view