பாப்பரசர் பிரான்ஸிஸின் ஈராக் விஜயம் : இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்பதை ஏற்றுக் கொண்ட முதலாவது கத்தோலிக்க மதத் தலைவர்

Spread the love

லத்தீப் பாரூக்
பாப்பரசர் பிரான்ஸிஸ் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாத முற்பகுதியில் ஈராக்கிற்கு விஜயம் செய்தார். பார்ப்பரசர் ஒருவர் ஈராக்கிற்கு விஜயம் மேற்கொண்டமை இதுவே முதற் தடவையாகும். 2003 முதல் ஈராக் மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்துக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் அதையும் பொருட்படுத்தாது அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார். பெரும்பாலும் அபிவிருத்தி கண்டிருந்த பண்டைய நாகரிகத்தைக் கொண்ட ஈராக்கை 2003 முதல் அமெரிக்காவும் அதன் நேசப் படைகளும் கொலைகளமாக மாற்றி உள்ளமை சகலரும் அறிந்த ஒன்றே.
பாப்பரசருக்கு ஈராக் அரசு மிகச் சிறந்த வரவேற்பை அளித்தது. அவரை வரவேற்பதற்கான குழுவில் ஈராக் ஜனாதிபதி, பிரதமர், ஏனைய அமைச்சர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலர் அங்கம் வகித்திருந்தனர். மிகவும் உணர்வுபூர்வமான ஒரு வரவேற்பாக அது அமைந்தது. பெரும்பாலும் இவ்வாறான ஒரு வரவேற்பை எந்தவொரு பாப்பரசரும் வேறு எந்தவொரு நாட்டிலும் பெற்றிருக்க முடியாது என்று குறிப்பிடும் அளவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பாகவும் அது அமைந்திருந்தது.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ்ஸின் எச்சங்கள் இன்னும் எஞசியுள்ள சூழ்நிலையில் இந்த நாட்டின் ஒட்டு மொத்த இராணுவமும் கத்தோலிக்க தலைவரைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டன. அதற்கப்பால் 200க்கும் மேற்பட்ட பொலிஸாரும் அங்குள்ள அமெரிக்க விஷேட படையினரும் கூட இந்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஈராக் முழுவதும் வான்பரப்பு சூன்ய பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. ஈராக்கில் உள்ள சிரேஷ்ட ஷீஆ மதத் தலைவர் ஆயத்துல்லாஹ் அல் சிஸ்தானிக்கும் பாப்பரசருக்கும் இடையில் நஜாப் நகரில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பை முன்னிட்டு நஜாப் நகரமும் முற்றாக மூடப்பட்டிருந்தது.
ஒரு காலத்தில் முஸ்லிம் உலகின் தலைநகராகத் திகழ்ந்த நாடு தான் ஈராக் அது உலகின் சக்தி மிக்க ஒரு நாடாகவும் திகழ்ந்தது என்றாலும் அது மிகையாகாது. வத்திக்கான் மிகவும் அச்சம் கொண்டிருந்த ஒரு நாடாகவும் ஈராக் காணப்பட்டது. முஸ்லிம்களின் வணிகக் கப்பல்கள் வரிசையில் நிற்பதைக் கண்டால் அவர்களை ஆத்திரம் கொள்ளச் செய்யக் கூடாது என்பதற்காக வத்திக்கானின் ஆலய மணிகள் கூட ஓசை எழுப்ப மறுக்கும் என்று வர்ணிக்கப்பட்டதுண்டு.
பாப்பரசர் ஈராக்கில் இருந்த போது இதற்கு முன்னர் இருந்த பாப்பரசர்கள் எவரும் கூறாத ஒரு விடயத்தைக் கூற அவர் தயங்கவில்லை. யூதர்களும், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஆப்பிரகாமின் பிள்ளைகள் என்பது தான் அவர் கூறிய விடயம். அத்தோடு இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்பதையும் ஏற்றுக் கொண்டு அவ்வாறு ஏற்றுக் கொண்ட முதலாவது கத்தோலிக்க பாப்பரசர் என்றும் அவர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
அவருக்கு முன்னாள் பதவியில் இருந்த பாப்பரசர்கள் முஸ்லிம்கள் சரியான நேர்மையான ஒரு மனிதரான முஹம்மதின் போதனைகளைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதை ஒப்புக் கொண்டிருந்தனர், ஆனால் அவரது வேதநூல் இறைவேதம் அல்ல அதை அவரே எழுதினார் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.
ஈராக்கில் இந்த நூற்றாண்டில் காணப்படும் சமய, கலாசார மற்றும் இன பன்முகத்தன்மை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விலை மதிக்க முடியாத ஒன்றாகும். மாறாக அது அகற்றப்பட வேண்டிய ஒரு தடையல்ல என்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற வைபவத்தில் பேசும் போது பாப்பரசர் குறிப்பிட்டார். இந்த பல்லினத்தன்மையை குறிப்பாக மத்திய கிழக்கிற்கும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் காட்ட வேண்டிய பொறுப்பில் ஈராக் இன்று உள்ளது. மோதல்களுக்கு இடமளிப்பதற்கு பதிலாக பல்லினத்தன்மையை வளர்ப்பது மனித சமூகத்தில் இணக்கப்பாடு ஒத்துழைப்பு என்பனவற்றை மேம்படுத்த வழியமைக்கும் என்று அவர் மேலும் எடுத்துரைத்தார். பெரும்பாலும் இந்தச் செய்தி பாப்பரசரால் ஈரானுக்காக விடுக்கப்பட்ட செய்தியாகவே

அமைந்திருந்தது
ஷீஆ மதத்தலைவர் ஆயத்துல்லாஹ் சிஸ்தானியை பாப்பரசரும் அவரது குழுவினரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்.
தனது விஜயத்தின் இரண்டாம் நாளில் பாப்பரசர் ஈராக்கின் செல்வாக்கு மிக்க ஷீஆ மதத் தலைவர் ஆயத்துல்லாஹ் சிஸ்தானியைச் சந்தித்தார். புனித நஜாப் நகரில் உள்ள ஆயத்துல்லாஹ் சிஸ்தானியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது ஊடகங்கள் எவற்றுக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. பாப்பரசர் அந்த இல்லத்துக்குள் பிரவேசித்ததும் சமாதானத்தின் அறிகுறியாக சில வெள்ளைப் புறாக்கள் பறக்க விடப்பட்டன. ஈராக்கில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் இடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றுக்கான அடையாளமாக இது அமைந்தது.
மேலும் ஆயத்துல்லாஹ் சிஸ்தானியை அவர் சந்தித்தமையானது ஆயத்துல்லாஹ்வின் முக்கியத்துவத்தையும் அந்த சமயப் பிரிவுக்கான அடையாளச் சின்னத்தையும் அங்கீகரிக்கும் வகையில் அமைந்திருந்தது. ஈராக்கில் அரசியல் அரங்கில் அவர் தீர்க்கமான ஒரு பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
இந்தச் சந்திப்பு பற்றிக் குறிப்பிடடுள்ள ஏஸியன் டைம்ஸ் 7ம் நூற்றாண்டின் பின் ரோமன் கத்தேலிக்க பாப்பரசர் ஒருவருக்கும் ஷீஆ மதத் தலைவர் ஒருவருக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமைந்துள்ளது. அந்த வகையில் வரலாற்று ரீதியாக இது சமன்பாட்டுக்கான ஒரு மூலாதாரமாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 50 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த நேருக்கு நேர் சந்திப்பும் பேச்சுவார்த்தையும் ஏற்படுத்திய முழு அளவிலான தாக்கத்தையும் மதிப்பீடு செய்ய இன்னும் நீண்ட காலம் செல்லலாம். நஜாப் நகரில் இமாம் அலியின் சமாதிக்கு அருகில் அமைந்துள்ள ஆயத்துல்லாஹ்வின் ஏழ்மையான வீட்டில் இடம் பெற்ற இந்தச் சந்திப்பின் போது இரு தலைவர்களுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர்.
கி.மு 6000 ஆண்டுகள் பழமையானதும் முன்னாள் யூப்பிரடீஸ் அமைந்துள்ளதுமான உர் பிரதேசத்தின் மொசப்பத்தேமியா பகுதிக்கும் பாப்பரசர் விஜயம் செய்தார். இது ஈராக்கின் மிகவும் பண்டைய தொல்பொருள் அகழ்விடங்களில் ஒன்றாகும். சுமேரிய அரச பரம்பரையின் கடைசி தலைநகரமும் இதுவேயாகும். எழுத்தாக்கங்களின் தோற்றம், மத்திய அரசு அதிகாரம், நகர்ப்புற வாழ்வு என்பனவற்றின் தோற்றம் கூட இங்கு தான் ஆரம்பமானதாக நம்பப்படுகின்றது.
பாப்ரசரின் உத்தியோகப்பூர்வ வரவேற்பின் முதலாவது நிகழ்வாக புனிதக் குர்ஆனின் சுறா இப்றாஹிம் (ஆப்றாஹிமின் அத்தியாயம்) இன் ஒரு பகுதி ஓதப்பட்டது. இந்தத் தெரிவுக்கான காரணம் நபி இப்றாஹிம் பிறந்த இடமும் இதுவேயாகும். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறைதூதர் இவரேயாவார்.
மோஸ{ல் நகரில் உள்ள மற்றொரு இறைதூதரின் நினைவுத் தூபியையும் பாப்பரசர் தரிசித்தார். அது ஏற்கனவே அழிக்கப்பட்ட ஒரு தூபியாக உள்ள போதிலும் அவர் அந்த இடத்துக்கு விஜயம் செய்தார். ஈராக்கில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தைப் பொருத்தமட்டில் இது உலகிலேயே மிகவும் பண்டைய இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பாப்பரசரின் ஈராக் விஜயம் மிக முக்கியமான உணர்வுகளை புதுப்பிக்கும் வகையிலும் தாக்கங்களை உருவாக்கும் வகையிலும் அமைந்திருந்தது. பாப்பரசரோடு வருகை தந்திருந்த ஐரோப்பிய நாட்டின் இன்னொரு கிறிஸ்தவ மதகுருவிடம் உள்ளுர் மதகுரு ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் “கடந்த 2000 வருடங்களாக நாம் அவருக்காகக் காத்திருந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆறாயிரம் ஆண்டுகள் பழமையான இறைதூதர் இப்றாஹிமின் பிறப்பிடம். இஸ்லாம் கிறிஸ்தவம் மற்றும் யூத மதங்கள் என மூன்று சமயங்களின் பிதாவாகக் கருதப்படுபவர் இவரே.
2003ம் ஆண்டளவில் சுமார் 15 லட்சம் கிறிஸ்தவர்கள் ஈராக்கில் வாழ்ந்து வந்தததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்பும் அட்டூழியமும் அங்கு ஆரம்பமான போது பிரிவினைவாதமும் தூண்டி விடப்பட்டது. பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்புச் சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட போது நாட்டின் வடக்கிலும் மேற்கிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் குறைக்கப்பட்டு 150000 த்துக்கும் 400000 த்துக்கும் இடைப்பட்டதாக அது மாற்றப்பட்டது.
உலகின் மிகவும் பழமையான நாடுகளில் ஒன்றான ஈராக்கிற்கு பாப்பரசர் விஜயம் மேற்கொண்டமை ஈராக்கின் கிறிஸ்தவ மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விடயமாகவே அமைந்தது.

Post Disclaimer

Disclaimer: பாப்பரசர் பிரான்ஸிஸின் ஈராக் விஜயம் : இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்பதை ஏற்றுக் கொண்ட முதலாவது கத்தோலிக்க மதத் தலைவர் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect Latheefarook.com point-of-view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *